பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனம் குறித்து, சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்..
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பெரிய திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவர் தென்னிலையில் உள்ள பிரபு என்பவருக்கு சொந்தமான தனியார் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேமிப்பதில் ஆர்வம் கொண்டவர் முருகேசன். இதனிடையே முகநூல் பக்கம் ஒன்றில், ‘ராஜு ஓல்ட் காயின் கம்பெனி, கொல்கத்தா’ என்ற முகவரி கொண்ட விளம்பரத்தை பார்த்து, அதில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம், தனது சேமிப்பில் வைத்துள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
அதைப் பார்த்த அந்த நிறுவனம், முருகேசன் சேமிப்பில் உள்ள பழைய நாணயங்களுக்கு 36 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், பணத்தைபெறுவதற்கு முன்பாக ஆவணம் தயார் செய்வதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்காக 1,800 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் 36 லட்சம் ரூபாய் பணத்தை மெஷின்கள் மூலம் எண்ணி, பேக்கிங் செய்யும் வீடியோக்களை முருகேசன் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.