மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
அனைத்து துறை வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
பின்னர் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, நீர்வள ஆதாரத்துறை, பொதுப்பணித்துறை, மீன்வளத்துறை உள்ளிட்டத்துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப்பணிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ஆகியவைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் தற்போது உள்ள நிலை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சித்திட்டப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு மேலாக பணிகள் நிறைவுற்று உள்ளது. குறிப்பாக குறுவை சாகுபடியை பொருத்தவரை 39 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 26 ஆயிரம் ஹெக்டேர் நெல் அறுவடை பணிகள் முடிவுற்று உள்ளது. அதேபோல் சம்பாவிற்கு தேவையான உரம் மற்றும் விதைகள் தேவையான அளவிற்கு கையிருப்பு உள்ளது. விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருகிறது. நீர்வளத்துறையின் மூலம் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளது. கடைமடைக்கு பாசனநீர் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் மாவட்ட நூலகம் கட்டுவதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவுற்று உள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் துவங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என மாண்புமிகு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரத்து 269 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களும், 2 பயனாளிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 104 மதிப்பிலான சலவை பெட்டிகளும், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 11 நபர்களுக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டையையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும், மாவட்ட வழங்கல்துறை சார்பில் 15 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், சமூக நலத்துறையின் சார்பில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 747 மதிப்பிலான முதிர்வு தொகைக்கான காசோலைகளும் வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 800 மதிப்பிலான இடுப்பொருட்களும் ஆக மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 920 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மு.சபீர் ஆலம் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஸ்ணுபிரியா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி,செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர்,குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன்,கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஸ்,மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ்,சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.