மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தந்தை
மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டு, தந்தை தானும் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை யாகப்பா நகர் பாலாஜிநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் சேதுபதி(வயது 35) இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு ரக்சிதா, ரக்ஷனா ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் .
இந்நிலையில் இரு குழந்தைகளும் நேற்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது இரண்டு குழந்தைகளான 7 வயது குழந்தை ரக்சனா மற்றும் 5 வயது குழந்தை ரக்சிதா ஆகியோரை கத்தியால் குத்தியும், கம்பியால் கழுத்தை நெரித்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தந்தை சேதுபதியும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் இதற்கிடையே கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி கதவை திறந்து பார்த்தபோது குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில், கணவர் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதையும் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர் இரு குழந்தைகளின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையே தான் பெற்ற இரு குழந்தைகளையும் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.