தனது பிறந்த நாள் அன்று ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய உறவினர்கள்
மதுரை மேலபனங்காடி, குலமங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து-கிருஷ்ணவேணி தம்பதியினர். இவர்களது மகள் பாலஹரிணி. இவர் தபால் தந்தி நகர் பார்க் டவுன் விஸ்தரிப்பு பகுதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது ஒன்பதாவது பிறந்தநாளில் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு மற்றும் மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என தனது ஆசையை கூறினார்.
அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், ஹரிணியின் தாத்தாவும், மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியுமான, சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன் மற்றும் காளிமுத்து ஆகியோர் மதிச்சியம் பகுதியில் உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் தாணுமாலையன் நினைவு அறக்கட்டளை இணைந்து நடத்தும், நகர்ப்புற வீடற்ற ஏழைகள் முதியோர் தங்கும் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு, அறுசுவை அன்னதானம் வழங்கினர்.
மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை காளிமுத்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் இல்ல மேலாளர் முருகப்பன் நன்றியுரை கூறினார்.