காந்திய சிந்தனை, தேசிய தலைவர்களின் தியாகம் மற்றும் அமைதிக் கல்வி ஆகியவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காந்தி அருங்காட்சியகத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம் கல்லூரிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.
மதுரை காந்தி என். எம். ஆர். சுப்பராமன் மகளிர் கல்லூரியும் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனமும் ஐந்து ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று செய்து கொண்டன. கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.எஸ். கோமதி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ஆர். தேவதாஸ் ஆகியோர் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்துயிட்டனர்.
அருங்காட்சியகச் செயலாளர் கே. ஆர். நந்தாராவ் மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ். மஹிமா ஆகியோர் சாட்சி கையெழுத்துயிட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி கல்லூரியில் படிக்கின்ற மாணவிகளுக்கு உண்மை, சர்வோதயம், சிரமதானம், சத்தியாகிரகம்,தேச பக்தி, சுகாதாரம், தூய்மை, தேசிய தலைவர்களின் அர்ப்பணிப்பு,விழுமியம் மற்றும் அமைதி குறித்த சிந்தனை எடுத்துக் கூற இருக்கிறோம்.
மேலும் கல்லூரியில் கருத்தரங்கம் நடத்தவும் ,படிப்பிடைப் பயிற்சி நடத்தவும் ,யோகா விழிப்புணர்வு பயிற்சி , காந்திய சிந்தனை பேராசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகைச் செய்யும்.
இந்நிகழ்வில் கல்லூரியின் பேராசிரியர்கள் ,அருங்காட்சியாக கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.