இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினின் சாதனைகளுக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அஸ்வினின் சாதனைகளுக்காக பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் புதன்கிழமை (டிச. 18) நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அஸ்வின் இந்த முடிவை அறிவித்தார்.
இதுவரை, 38 வயதான அஸ்வின் 106 போட்டிகளில் விளையாடியுள்ளார், 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அவர், 8 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சிறப்பாக பேட்டிங் செய்பவராகவும் அஸ்வின் விளங்கினார். ஆறு முறை சதம் அடித்துள்ள அஸ்வின், 14 முறை அரை சதம் அடித்துள்ளார்
அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இதுதான் எனது கடைசி நாள். ஒரு கிரிக்கெட்டராக எனக்குள் இன்னும் திறமை இருப்பதாகவே உணர்கிறேன். ஆனாலும், அதை க்ளப் அளவிலான கிரிக்கெட்டில் அதைக் காட்ட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள்,” காபா டெஸ்டை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அஸ்வின் தெரிவித்தார்.
அப்போது, “ரோஹித், விராட், ரஜானே எனப் பல கிரிக்கெட்டர்களுக்கு நன்றி கூற வேண்டியுள்ளது. நன்றி சொல்வதற்கு நிறைய பேர் உள்ளனர். நிறைய நினைவுகளைச் சேகரித்துள்ளேன். இது மிகவும் உணர்ச்சி மிகுந்த தருணம்,” என்றும் கூறினார்.
இன்றைய போட்டிக்கு முன்னதாக, விராட் கோலி – அஸ்வின் இருவரும் அமர்ந்து பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்தக் காணொளியில், விராட் கோலி, அஸ்வினை ஆரத் தழுவுகிறார். அப்போது, அஸ்வின் ‘உணர்ச்சிவசப்பட்டு’ இருந்ததாக நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து, அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்ற யூகங்களும் கிளம்பிய நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.