செம்பனார்கோவில்:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை எதிர்கொள்வது தொடர்பாக செம்பனார்கோயிலில் புவிகாப்பு அறக்கட்டளை சார்பில், 10 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் பல லட்சம் பனை விதைகள் நடுதல் பராமரித்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நிர்வாக அறங்காவலர் இரணியன் தலைமை வகித்தார். நிதி அறங்காவலர் சிலம்பரசன் வரவேற்றார். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இதற்கு கடந்த 60 ஆண்டுகளாக ஆழ்குழாய் பம்பு செட் மூலம் பூமியில் இருந்து நீரை உறிஞ்சி விவசாயம் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதோடு, இப்பகுதியில் மத்திய அரசின் ஓஎன்ஜிசி மூலம் பூமியில் ராட்சத குழாய் அமைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்துவதால் அதிக நீர் பூமியிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் பூமியில் வெற்றிடம் ஏற்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் கடல் மட்டத்திற்கு கீழே புதைந்து வரும் அபாய சூழல் உள்ளது.
இதனை தடுக்க மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக மரக்கன்றுகளையும், கடலோரப் பகுதிகளில் பனை விதைகள் மூலம் பசுமை அரன்களை அமைக்கவும் உடனடி தேவை ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க ஆலோசிக்கப்பட்டது.
அதன்படி கூட்டத்தில், செம்பனார்கோவிலில் பல ஊராட்சிகளில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 1 லட்சம் பனை விதைகள் மக்களிடம் வழங்கியும், நடவும் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பராமரிப்பது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் கட்டமாக சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை வருகிற 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகளை நடுவது. கடலோரப் பகுதிகளை பாதுகாக்க வேண்டி பல லட்சம் பனை விதைகளை நடவு செய்து பராமரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் ஆலோசகர் சுந்தர், உறுப்பினர்கள் நந்தகுமார், சித்தார்த்தன், முகமது ரிஜா, முருகன், ஹரி கிருஷ்ணன், சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.