மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு அரங்கம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சட்டமன்ற அறிவிப்பின்படி, தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகம் அவர்களுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஆரோக்கியநாதபுரத்தில் 884 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. இவ்வரங்கமானது அரங்கம், உணவு கூடம், கூடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை தரமானதாக மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடி, ஒரு மதிப்பெண் மற்றும் இரு மதிப்பெண் வினாக்களை பாடங்கள் வாரியாக கேட்டறிந்தார். பொதுத்தேர்விற்கு முழமையாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி ஒன்றே மகத்தானது. அதனை திறம்பட கற்று மேன்மேலும் வாழ்க்கையில் உயர வேண்டும் என மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் , பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பால ரவிக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமர், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி வெளியீடு:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மயிலாடுதுறை.