மயிலாடுதுறை மாவட்டம்,
சீர்காழி வட்டம் செம்பதனிருப்பு கிராமத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை மக்கள் சிறப்பாக கொண்டாடிட ஏதுவாக இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு வழங்கிட ஆணையிட்டதன்பேரில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,357 குடும்ப அட்டை தாரர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 435 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பினை எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
நியாயவிலைக்கடைகளில் அதிக கூட்டம் சேராமல் இருக்க ஜனவரி 7- ஆம் தேதி முதல் 9 – ஆம் தேதி வரை குடும்ப அட்டைதார்கள் சார்ந்த நியாயவிலைக்கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு, ஜனவரி 9 ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டவுடன், அன்றைய தினமே மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி, ஜனவரி 13-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பொருள் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு 14 – ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.
இதனையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் செம்பதனிருப்பு கிராமத்தில் விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பு நீளம் 6 அடி குறையாமல் கொள்முதல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடி,அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில், வேளாண்மைதுறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் உ.அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி ஆகியோர் உடனிருந்தனர்.