நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிற்கு தான் உள்ளது, மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது, வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தேர்தலில் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதும், வெற்றிக்கு பிறகு மீண்டும் மக்களை ஏமாற்றுவதும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
நேற்று (ஜனவரி 10) வெள்ளிகிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில், நீட் தேர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்வதாக திமுக அறிவித்திருந்தது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை ரத்து செய்து இருப்போம். ஆனால், அதிமுகவின் ஆதரவு பெற்ற பாஜக தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.