செம்பனார் கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்
ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக 7,399க்கு விலை போனது
செம்பனார்கோயில்,
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனை குழு மூலம் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் இ-நாம் முறையில் 2024ம் ஆண்டுக்கான பருத்தி கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் நாகை விற்பனைகுழு செயலாளர் கோ. வித்யா தலைமையில் மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த பருத்தி ஏலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.7,399-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6,069-க்கும் சராசரியாக ரூ.6,620-க்கும் விலைபோனது. மொத்தமாக சுமார் 250 குவிண்டால் கொள்முதல் பரிவர்த்தனை நடைபெற்றது.
இந்த ஏலத்தில் 50 விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை, கொங்கணாபுரம், கும்பகோணம்,கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 7 வியாபாரிகள், மில் அதிபர்கள் கொள்முதல் செய்தனர்.
மேலும் விற்பனைகுழு செயலாளர் கூறுகையில் விவசாயிகளின் விளை பொருட்களை நல்ல விலைக்கு விற்க தமிழக அரசு பல திட்டங்களையும், பல சலுகைகளும் செய்துவரும் நிலையில் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களான நெல், எள், கம்பு, மக்காசோளம், பச்சபயறு, உளுந்து, தேங்காய், மிளகாய், போன்ற விளைபொருட்களை விற்பனை கூடங்களின் மூலம் விற்று இடை தரகர் இல்லாமல் நல்ல விலை பெற்று பயன் அடைய வேண்டும் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்