நாகப்பட்டினம் மாவட்டம் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., வேண்டுகோள்.2024-ஆம் ஆண்டில் தீபாவளி பண்டிகை எதிர்வரும் 31.10.2024 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையினை பாதுகாப்பான வகையிலும், அதிக மாசு ஏற்படாத வகையிலும், கொண்டாடி மகிழ்ந்திட 23.08.2018 மாண்பமை உச்சநீதிமன்ற உத்தரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். மேலும், 23 நீதிமன்ற ஆணையின்படி தீபாவளி பண்டிகை நாளன்று காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் மற்றும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என ஒதுக்கப்பட்டுள்ள 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். ஆபத்தான வகையில் மேலே தூக்கி எறிந்து பட்டாசுகளை வெடிக்கவோ, மக்கள் நடமாடும் இடத்தில் பட்டாசுகளை வெடிக்கவோ, தகர டப்பாக்களின் உள் பட்டாசுகளை வைத்து வெடிக்கவோ, பெரியவர்கள் துணையின்றி குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்கவோ கூடாது. ஓலை குடிசைகள் அருகிலும், பட்டாக கடைகளின் அருகிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். ஈரமுள்ள பட்டாசுகளை சமையலறையில் வைத்து உலர்த்தக் கூடாது. பட்டாசு விற்பனையாளர்கள் எக்காரணம் கொண்டும் மெழுகுவர்த்தியோ, பெட்ரோமாக்ஸ் அல்லது சிம்னி விளக்கையோ பயன்படுத்தக் கூடாது. இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது. கால்நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவை மிரண்டு ஓடும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், பாதசாரிகளும் காயம்பட நேரிடும் என்பதால் இச்செயலினை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும், தீ விபத்து அல்லது பட்டாசுகளினால் ஏதேனும் விபத்து நேர்ந்தால், காவல்துறை அவசர உதவி எண். 100. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அவசர உதவி எண். 101. அவசர மருத்துவ உதவிக்கு அவசர ஊர்தி எண். 108, தேசிய உதவி எண். 112 ஆகியவற்றை உடனடியாக தொடர்பு கொண்டு மனித உயிர்களை காப்பாற்றிடவும், பெரும் அசம்பாவிதங்களை தவிர்க்கவும் வேண்டும். மேற்கண்ட வழிமுறைகளை அனைவரும் தவறாது பின்பற்றி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியுடன், குதூகலத்துடனும், பாதுகாப்பாகவும் கொண்டாடிட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.