மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 250-வது நாளாக உணவளித்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையை ஏழை, எளிய மக்கள், சமூக சேவகர்கள் பாராட்டி வருகின்றனர்.
மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையில் வைகை ஆற்றை காக்கும் விதமாக கல்பாலத்தில் தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள ஆகாயத்தாமரைகளை தொடர்ந்து அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அறக்கட்டளை சார்பாக ஏராளமான சமூக சேவைகளை தினந்தோறும் செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கியிருந்து கவனித்து வரும் காப்பாளர்கள் தினமும் ஆயிரம் பேருக்கு விலையில்லா உணவு, குடிநீர், மற்றும் பழ வகைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த சேவையால் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக நிறுவனர் ஸ்டார் குரு தலைமையில் நடந்த 250-வது நாள் உணவு வழங்கும் விழாவில் 2000 க்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா உணவு, குடிநீர், பழ வகைகள் வழங்கும் நிகழ்வை காவல் துணை கண்காணிப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சட்ட ஆலோசகர். வக்கீல். முத்துக்குமார் மற்றும் ஹார்விபட்டி குமார் உட்பட நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் ஸ்டார் குரு கூறுகையில்:- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தினமும் ஆயிரம் பேர் வீதம் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு விலையில்லா உணவு, குடிநீர், பழ வகைகளை இதுவரை வழங்கியுள்ளோம். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் சீருடைகள் வழங்கியுள்ளோம். அடிப்படை வசதிகள் கிடைக்க பெறாத பள்ளிகளுக்கு சொந்த செலவில் அடிப்படை வசதிகள் செய்து தருகிறோம். மாற்று திறனாளிகளுக்கு தேவையான விலையில்லா உபகரணங்கள், விலையில்லா சக்கர நாற்காலிகளை வழங்கி உள்ளோம்.
பெண்களுக்கான சுய தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட விலையில்லா நவீன தையல் மிஷின்கள் வழங்கியும், சாலையோர ஆதரவற்றவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய முதலுதவி அளித்து பராமரித்து அவர்களது உறவினர்களிடம் சேர்த்து வைக்கும் பணியையும், வைகை ஆற்றின் தூய்மை செய்தல், ஆற்றினுள் ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் அடர்ந்து படர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றி அப்புற படுத்தி வருகிறோம்.
ஆற்றின் இரு கரையோரங்களிலும் இருநூறுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி ஆற்றினுள் கழிவுகளை கொட்டுவதை கண்காணித்து ஆறு அசுத்தமாவதை தடுத்து நிறுத்துதல் போன்ற சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்.
இனி வரும் காலங்களில் வைகை ஆற்று பாலத்தின் பக்கவாட்டு சுவர்களிலும், பாலத்திற்கு அடியிலும் போஸ்டர்கள் மற்றும் பிளக்கஸ் ஓட்டுவதை தடுத்து நிறுத்தி பாலத்தின் ஸ்திரத் தன்மையை காப்பதற்காக பாலத்தின் தமிழ் பாரம்பரியம் மிக்க வண்ண ஓவியங்களை வரைய உள்ளோம். மேலும் கோடை காலத்தை சமாளிப்பதற்காக முதல் கட்டமாக மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு நிழற் குடைகளை வழங்க உள்ளோம். மேலும் பசியால் வாடும் ஒரு கோடி பேருக்கு உணவு அளிப்பது என்கள் இலக்கு என்று அவர் கூறினார்.