மதுரை: மாநகர் காவல்துறை, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் இணைந்து நடத்திய போதை மற்றும் விபத்துக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நட்சத்திர நண்பர்கள் அமைப்பு மற்றும் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து நடத்தின. விழிப்புணர்வு பேரணியின் தொடக்க நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல்துறையின் வடக்கு துணை ஆணையாளர் அனிதா கொடியசைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். கலால் துறை உதவி ஆணையர் ராஜகுரு முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் ஸ்டார்குரு கலந்து கொண்டார். அமெரிக்கன் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, தியாகிராஜர் கல்லூரி, அப்போலோ நர்சிங் கல்லூரி உள்ளிட்ட ஏராளமான கல்லூரிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் தமிழன்னை சிலை வரை ஊர்வலமாக சென்று, போதை மற்றும் விபத்து ஒழிப்பு பதாகைகள் மற்றும் பேனர்கள் கையில் பிடித்தபடி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலமாக சென்றனர். பேரணியின் இறுதியில், அனைவரும் போதை மற்றும் விபத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சேதுமணிமாதவன், தல்லாகுளம் காவல் ஆய்வாளர் தாமரைவிஷ்ணு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ராஜ்குமார், வக்கீல் முத்துக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் அளித்தனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி, போதை மற்றும் விபத்துகளின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது